“காவிக்கறை” படியும் தென்னிந்தியா

ஒக்ரோபர் 24, 2008 at 1:32 பிப 1 மறுமொழி

“2011-இல் இந்து தேசம் உருவாகப் போகிறது. அச்சமயம் இந்தியாவில் உள்ள அனைத்து முசுலிம் தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டிருப்பார்கள் அல்லது செத்திருப்பார்கள். மீதி முசுலிம்கள் மதம் மாறி இந்துக்களாகி இருப்பார்கள். நாடு முழுவதும் இந்துக்கள் மட்டுமே இருப்பார்கள்“- இந்த படுபயங்கரச் சொற்களை உதிர்த்தவர் பாபுபாய் பட்டேல். இவர் குசராத்தில் செயல்பட்டுவரும் பஜ்ரங்கி நவ்சேத்னா அமைப்பின் தலைவர். அயோத்திச் சிக்கல், அதனைத் தொடர்ந்து நடந்த வகுப்புக் கலவரத்தில் முசுலிம்களைக் கொன்று குவித்த போது செய்தியாளர்களிடம் பாபுபாய் இவ்வாறு கூறினார்.

வகுப்புவாத அரசியலுக்கு இடம் தராமல் பல காலம் தென்னிந்தியா இருந்தது. ஆனால், வகுப்புவாத அரசியல் கட்சியான பா... கருநாடகத் தேர்தலில் வெற்றிபெற்று தென்னிந்தியாவில் முதல்முறையாக ஆட்சி அமைக்கிறது. இச்சமயத்தில் பாபுபாய் குறிப்பிட்டுள்ள சொற்கள் மிக முக்கியமானவை. சமூகத்தின் மீது அக்கறைகொண்ட அனைவரும் சிந்திக்க வேண்டியவை. இந்து பண்பாட்டைக் காப்பதாகவும் அதனைத் தூய்மைப்படுத்துவதாகவும் கூறிச் செயல்படுவரும் விசுவ இந்து பரிசத் அமைப்பின் அரசியல் வடிவம்தான் பா... இந்த வகையில் பா..., வி..., மதவெறிகொண்ட துணை அமைப்புகள் ஆகியவற்றின் கடந்த காலச் செயல்பாடுகளை நாம் நினைவுக்கு கொண்டுவருவோம்.

கடந்த 2002-ஆம் ஆண்டு 27-ஆம் தேதி கோத்ராவில் சபர்மதி விரைவுத் தொடர்வண்டி எஸ்-6 பெட்டி தீப்பிடித்து எரிந்ததில் 59 கரசேவகர்கள் இறந்தனர். இதற்கு முசுலிம்கள்தான் காரணம் என்று முதலில் வதந்தி பரவியது. பின்னர், இது பயங்கரவாதிகளின் சதி என்று கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து குசராத் மாநிலம் முழுவதும் பற்றி எரியத் தொடங்கியது. அங்கு பிப்ரவரி 28- ஆம் தேதி தொடங்கி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இலட்சம் வீடுகள், கடைகள், உடைமைகள் பாழாகின. குல்பர்க் பகுதியில் 5 ஆயிரம் வீடுகள் எரிந்து ஆள் இல்லாமல் ஆன்மா இல்லாமல் கிடக்கின்றன. இந்தத் தாக்குதலில் இருந்து முசுலிம்கள் தப்பித்து வெளியேறிவிடக் கூடாது என்பதற்காக சாலைகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. கருவுற்றிருந்த முசுலிம் பெண்களின் வயிறுகள் கிழிக்கப்பட்டு அரைகுறையாக வளர்ந்திருந்த சிசுக்கள் அழிக்கப்பட்டன. இந்தக் கொடுஞ்செயல்கள் ஏதோ தானாகவே நடந்தவை அல்ல; திட்டமிட்டு நடத்தப்பட்டவை. இச்செயல்களில் ஈடுபட்ட இந்து வெறியர்களுக்கு முதலமைச்சர் மோடி தலைமையிலான பா... அரசு உறுதுணையாக இருந்தது.

இந்துத்துவத்தின் ஆய்வுக்களமாக குசராத்தை நிலை நிறுத்தி அங்கு நாயகனாக வளர்க்கப்பட்டவர்தான் இந்த மோடி. இத்தாக்குதலுக்குப் பிறகு அகமதாபாத் உள்ளிட்ட குசராத்தின் பல நகரங்கள் இந்துமுசுலிம் என இரண்டாகப் பிரிந்து கிடக்கின்றன. கலவரத்தில் தெறித்து ஓடியவர்கள் முகாம்களில் தங்கியுள்ளனர். 2002-இல் குடியிருப்புகளை விட்டு விரட்டப்பட்ட 5 ஆயிரம் முசுலிம் குடும்பங்கள் வாழும் 69 குடியிருப்புகள் இன்னும் இருக்கின்றன. ஆனால், அவர்கள் அங்கு வந்து வாழமுடியாது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் மோடியைக் கண்டித்தது. அதற்கு விடையளித்த மோடி,. “முகாம்களில் இருந்து முசுலிம்கள் வரமறுப்பது பயத்தால் அல்ல; இப்போதுள்ள இடத்தில் வருமானம் அதிகமாகக் கிடைக்கிறதுஎன்று கூறினார். தான் ஆட்சி செய்யும் பகுதியில் குறிப்பிட்ட ஒருசாரார் மிக மோசமாக நடத்தப்பட்டனர்; நடத்தப்படுகின்றனர் என்ற மனநெருடல் முதலமைச்சராக இருக்கும் மோடிக்குத் துளியளவும் இல்லை. ஏனென்றால் அவருக்குக் கற்பிக்கப்பட்ட பாடம் கற்பிக்கப்பட்டது.

மோடி போன்ற அடிப்படைப் பிற்போக்குவாதிகள் அனைத்து மாநிலங்களிலும் முதலமைச்சர்களாக இருந்தால் பாபுலால் பட்டேலின் எண்ணம் விரைவில் நிறைவேறும்..பி சட்டமன்றத் தேர்தலின்போது பா.. குறுந்தகடு ஒன்றை வெளியிட்டது. அது குறித்து முறையீடுகள் அதிகமாக வந்ததைத் தொடந்து பா...வின் இந்தியத் தலைவர் இராச்நாத் சிங் மீதும் .பி. மூத்த தலைவர் லால்ஜி தாண்டன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டன. அக்குறுந்தகட்டின் உள்ளடக்கத்தை இந்தியாவின் அறைகூவல் என்னும் தலைப்பில்தி இந்துநாளிதழ் வெளியிட்டிருந்தது. தலையில் முசுலிம் போல தொப்பி அணிந்த ஒருவர் மகிழுந்தில் குண்டுவைக்கிறார். இந்துக்கள் போல் வேடமிட்டு இரண்டு இளைஞர்கள் பசுக்களை விலை கொடுத்து வாங்குகின்றனர். அதில் ஒரு பசுவைக் கொன்று இறைச்சி எடுக்கின்றனர். இவ்வாறான காட்சிகளில் விரியும் இப்படத்தில் பார்வையாளருக்கு சில கருத்துக்களை ஆழமாக மனதில் பதியவைக்கிறது. அதாவது., முசுலிம்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாகிறது. இதற்கு காங்கிரசுதான் காரணம். நாட்டையும் இந்து மதத்தையும் காப்பாற்ற பா...வுக்கு வாக்களியுங்கள் என்ற கருத்து அழுத்தமாக இருந்தது. ஆனாலும், .பியில் அவர்களால் வெல்ல முடியவில்லை.இத்தகைய பயங்கரமான மதவாதக் கட்சி அடுத்தடுத்து இந்தியாவில் மாநில ஆட்சியைக் கைப்பற்றுவது நல்லதா?, உறுதியாக இல்லவே இல்லை.

இப்போது கருநாடகத் தேர்தலில் இலவசத் திட்டங்களை அறிவித்தும் சோனியாகாந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட அரசியல் பேராளர்கள் பரப்புரையாற்றியும் 224 இடங்களில் பா... 110 இடங்களைப் பெற்றுப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. மக்களை வளர்க்கும் பொருளாதாரத் திட்டங்களோ சமூகத்தை முன்னேற்றும் முற்போக்குக் கொள்கைகளோ பா...விடம் இல்லை. மாறாக மத வெறியைத் தூண்டிவிடுவது மட்டுமே மிக முக்கியமான குறிக்கோள். ஆனாலும் காங்கிரசு நடுவண் அரசில் ஆட்சி செய்யும் காலக்கட்டத்திலேயே மார்ச் 2007-இல் பஞ்சாபிலும் உத்தர்கண்டிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த இரண்டு மாநிலத்திலும் காங்கிரசு தோற்றது. பா.. வென்றது. இதற்குக் காரணம் காங்கிரசின் உட்கட்சி மோதலே என்று கூறப்பட்டது. கருநாடகத்தில் பா... வென்றதற்குப் பெரிய கொள்கை ஒன்றும் கிடையாது. காங்கிரசிற்கான மாற்று என்றே மக்கள் நினைக்கின்றனர். எனவே, காங்கிரசின் தோல்வி என்பது மத நல்லிணக்கத்தின் தோல்வி என்றே கருதலாம்.

இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதை காப்பாற்றுவதற்கு மதவாதமற்ற கட்சிகளை ஒன்றிணைப்பது தேவை. அந்தப் பணியை காங்கிரசு செய்துவந்தது. ஆனாலும், பொருட்களின் விலைவாசி உயர்வானது மக்களின் மனதில் வெறுப்பை உருவாக்கியிருக்கிறது. மக்களவைத் தேர்தலுக்கு ஓர் ஆண்டே உள்ளநிலையில் கருநாடகத்தேர்தல் முடிவைக் கண்டு, அத்வானியும் இராச்நாத்சிங்கும் கொக்கரிக்கிறார்கள்.

பெரியார் பிறந்த மண்ணில் வகுப்புவாதம் நுழையாது என்று கூறப்படும் தமிழகத்தில் பா... பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடுகிறது. இப்போதுள்ள நிலையே நீடித்தால் பா... நடுவண் ஆட்சியைக் கைப்பற்றுவது உறுதி. பா... ஆட்சியில் அத்வானிதான் பிரதமராவார். அவரைப் பற்றி நாடு அறிந்த ஒரு நிகழ்வை இங்கு நினைவு கூர்வோம்.பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் உரிய இடஒதுக்கீட்டை அளிக்க வகைசெய்வதற்கு மண்டல் குழுவை பிரதமர் வி.பி.சிங் அமைத்தார். மண்டல் அறிக்கையை எதிர்த்து அத்வானி ரத யாத்திரை மேற்கொண்டார். அவர் செல்லும் வழியெங்கும் கலவரங்கள் வெடித்தன. இத்தகையநல்லவர்அத்வானி பிரதமரானால் பாபுபாய் பட்டேலின் கனவு நனவாகும். இந்நேரத்தில் காங்கிரசு தன் குறைபாடுகளைக் கண்டறிந்து அதனைப் போக்க விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நெருங்கி வரும் ஆபத்து மக்களை பாதிக்கும்.

பெரும் புரட்சிக்காக பாடுபட்டு வருவதாக மார்தட்டிக்கொள்ளும் கம்யூனிஸ்ட் கட்சிகள், கருநாடகத்தில் பா... வெற்றிபெற்ற இச்சமயத்திலாவது வறட்டு அரசியலை விட்டுவிட்டு ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். காங்கிரசு ஆட்சிக்கு மாற்று பா... ஆட்சி என்று கருதும் மக்களின் மனப்போக்கில் மாற்றத்தை கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏன் கொண்டுவர முடியவில்லை. காரணம், நாட்டிற்கு ஆற்றவேண்டிய கடமைக்கும் மக்களுக்கு ஆற்றவேண்டிய கடமைக்கும் இடையே கம்யூனிஸ்ட்களுக்கு இருக்கும் குழப்பம் இன்னும் தீர்ந்தபாடில்லை.

1951-ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட்கள், தலைவர் ஸ்டாலினைக் காண இரஷ்யாவுக்கு சென்றிருந்தனர். அப்போது, ‘பன்னாட்டுக் கடமைகளை நிறைவேற்ற நீங்கள் வந்திருப்பது சரியே, அதனை நடைமுறைப்படுத்தும்போது, நாட்டின் கடமைக்கும் உங்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றவேண்டிய கடமைக்கும் இடையே பெரும் சிக்கல் இருக்கிறது. அந்தச் சிக்கல்களை நீங்கள் புரிந்துகொண்டீர்கள். அந்தப் புரிதலே உங்களைத் தோல்வியடைய செய்துவிட்டதுஎன்று தலைவர் ஸ்டாலின் கூறினார். இந்தியக் கம்யூனிஸ்ட் குறித்த அவரின் மதிப்பீடு இன்றும் தொடர்கிறது.

மதவாதக் கட்சிக்கு எதிராக மக்களின் மீது அக்கறைகொண்ட முற்போக்குக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்.சரி, கருநாடகத்தில் பா... ஆட்சி எப்படி இருக்கும். சட்டப்பேரவையைக் கலைப்பதற்கு முன்பு ஒருவாரம் முதல்வராக இருந்த எடியூரப்பா முதலமைச்சராகிறார். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு எடியூரப்பா தம் ஆதரவாளர்களுடன் ஒகேனக்கல் பகுதிக்கு வந்து ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற விடமாட்டோம் என்று காவிக் கொடி பிடித்தபடி போராட்டத்தில் ஈடுபட்டார். எனவே, அவரின் ஆட்சியில் ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றுவதில் பெரும் சிக்கல் உள்ளது. முதற்செயல் தவறாக நடந்தால் முழுக்க தவறாகவே முடியும் என்பார்கள்.

தேசியப் பற்றுகொண்ட பா... மக்களின் மிக முக்கிய சிக்கலான குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று சொல்வது எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும். தேர்தல் வெற்றி அறிவிக்கப்பட்டதும் செய்தியாளர்களுக்கு எடியூரப்பா அளித்த நேர்காணலில், கருநாடகத்தில் நிலம், மொழி, நீர் ஆகியவற்றை காக்கப் பாடுபடுவேன் என்று கூறியுள்ளார். இன்னும் எதிர்காலத்தில் என்னென்ன நடக்குமோ? பொறுப்பானவர்கள் பொறுமையுடன் இருக்கக் கூடாது.

(கருநாடகத்தில் எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்ற அன்று…)

Entry filed under: கட்டுரைகள். Tags: , , , , , , .

”சிலர் குறும்படங்களில் மக்கள் விரோதக் கருத்துக்களையும் திணிக்கிறார்கள்” அரசு பள்ளிகள்:வெட்கப்பட வேண்டும்!

1 பின்னூட்டம் Add your own

  • 1. mathan  |  7:17 முப இல் ஓகஸ்ட் 24, 2009

    இந்தியா இப்போது இந்து தீவிரவாதிகளின் கைகளில் சிக்கி தவிக்கிறது மனிதனை மனிதனாக மதிக்க தெரியாத இவர்களுக்கு மதத்தை ஒரு ஆயுதமாக் பயண்படுத்தி வருகின்றனர் இதற்க்கு காவல் துறையும் உடந்தையாக செயல்படுகிறது இது தடுத்து நிறுத்தபட வேண்டும்

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


நாட்காட்டி

ஒக்ரோபர் 2008
தி செ பு விய வெ ஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Most Recent Posts